சனி, 25 பிப்ரவரி, 2012

நடப்பு செய்திகள்


நடப்பு செய்திகள்



விருதுநகர், பிப். 23-

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று இரவு பீகாரை சேர்ந்த ராஜ்குமார் (வயது 26), சஞ்சய் (26) ஆகிய 2 பேர் மது வாங்க வந்தனர்.

அவர்கள் இருவரும் மதுக்கடையில் ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தனர். அந்த ஆயிரம் ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருந்ததை பார்த்து மதுக்கடை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து அவர்கள் சாத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து பீகார் வாலிபர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்களிடம் மேலும் ஒரு ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கள்ளநோட்டு எப்படி கிடைத்தது என்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





அருப்புக்கோட்டை

 1 1



அருப்புக்கோட்டை அருகே உள்ள வீரசோழனில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த செல்வராஜ்(வயது 44) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இங்கு நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன், மருதுபாண்டி, செந்தில், செல்வராஜ் ஆகிய 4 பேரும் மது அருந்தி கொண்டிருந்தனர்.போதை தலைக்கேறியதால் 4 பேரும் சேர்ந்து கடை ஊழியர் செல்வராஜிடம் தகராறு செய்தனர்.

தகராறு முற்றவே செல்வராஜை சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து வீர சோழன் போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த தமிழரசன், மருது பாண்டி ஆகியோரை கைது செய்தனர். மேலும் செந்தில், செல்வராஜ் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்

ஈரோடு



ஈரோடு: பவானி தாலுகா பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் மாவட்ட மேலாளர் ஆய்வு நடத்தி, வசூல்வேட்டை நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜன., 27ம் தேதி பவானி தாலுகா பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளில், மாவட்ட மேலாளர் சுகுமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பல கடைகளில் குறைகள் கண்டறியப்பட்டன. அவற்றின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க, ஒவ்வொரு கடைக்கும் தலா, 5,000 ரூபாய் வீதம், 20க்கும் மேற்பட்ட கடைகளில் வசூல்வேட்டை நடத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.டாஸ்மாக் கடை ஊழியர்கள் கூறியதாவது:ஆய்வின் போது, ஊழியர்களை திட்டியதுடன், மாதாந்திர விற்பனை இலக்கு முடிக்கவில்லை, இருப்பு, பதிவேடு, விலை அதிகம் போன்ற குறைகள் இருப்பதாக கூறியுள்ளார். இதன்மீது நடவடிக்கை எடுக்காமலிருக்க டிரைவர் மூலம் கடைக்கு, 5,000 ரூபாய் வீதம், 20க்கும் மேற்பட்ட கடைகளில் வசூல் நடத்தப்பட்டுள்ளது. இதுபோக டிரைவருக்கென தலா, 500 ரூபாய் பெறப்பட்டுள்ளது.கப்பம் கட்டியதால்,பெரும்பாலான கடைகள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டன
.

கணக்கு காட்டுவதற்காக நான்கைந்து கடைகளில் மட்டும் குறைகள் சுட்டிக்காட்டப்பட்டன.விதிமுறைப்படி நடந்தாலும், தவறு செய்தாலும் ஒவ்வொரு கடையிலிருந்தும் கட்டாயமாக செல்ல வேண்டிய மாதாந்திர மாமூல் சென்று கொண்டிருக்கிறது. இவ்வேளையில், அதிரடி வசூல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாவட்ட மேலாளர்களாக தொகுதிப்பூதியம் அடிப்படையில் எம்.பி.., பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். அதன் பின், தற்போதுள்ள வருவாய்த் துறை அதிகாரிகள் அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவர். பதவியிலிருந்து விலகுவதற்குள், ஒரு ரவுண்ட் கலெக்ஷன் பார்த்துவிட வேண்டும் என்பதே அதிரடி வசூலுக்கு காரணம். தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக அதிரடி வசூல் நடத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சுகுமாரிடம் கேட்ட போது,""மாதாந்திர விற்பனை இலக்கு முடிக்காதது குறித்து, பவானி பகுதியிலுள்ள நான்கு கடைகளில் ஆய்வு மேற்கொண்டேன். இதில், இலக்கு முடிக்காத மூன்று கடைகளில் குறிப்பு எழுதி, எச்சரித்துள்ளேன். அதிக விலைக்கு மது விற்ற ஒரு கடைக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளேன். திடீர் ஆய்வு நடவடிக்கை பிடிக்காததால், வசூல்வேட்டை நடத்துவதாக புகார் பரப்புகின்றனர். இதில், உண்மை ஏதுமில்லை. எப்போது வேண்டுமானாலும் வந்து பதிவேடுகளை பார்வையிடலாம். தற்போதுதான் கோவை மண்டல மேலாளர் புகாரில் சிக்கி கைதாகியுள்ளார். இதுபோன்ற செயல்கள் நடப்பது எப்படி சாத்தியமாகும்?,'' என்றார்.

ராமநாதபுரம் :

ராமநாதபுரம் : தொடர் மின்வெட்டால், ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், டாஸ்மாக் மது விற்பனை கடந்த மாதத்தை காட்டிலும், இம்மாதம் இதுவரை ரூ.3 கோடிக்கும் கூடுதலாக விற்பனையாகி உள்ளது.
மின்வெட்டால் ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்சாரம் இருப்பதில்லை. இதனால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை துவக்க உதவுவதை தவிர்த்து, அரசு, மின் உபயோகத்தை குறைப்பதற்குரிய வழிகளே ஆராயப்படுகிறது. இதனால் மின்வெட்டை பழகிக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். டாஸ்மாக் மதுக்கடைகளில் மட்டும், விற்பனை களை கட்டி நடக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் ரூ.26 கோடி மதிப்பிலான 68 ஆயிரத்து 639 கேஸ் பெட்டிகளும், 24 ஆயிரத்து 057 பீர் பெட்டிகளும் விற்பனையாகியுள்ளன. ஜனவரியில் ரூ.29 கோடிக்கு, 75 ஆயிரத்து 944 மது பெட்டிகளும், 30 ஆயிரத்து 045 பீர் பெட்டிகளும் விற்பனையாகின. இம்மாதம் 16ம் தேதி வரை ரூ.17 கோடிக்கு, 44 ஆயிரத்து 315 மது பெட்டிகளும், 17 ஆயிரத்து 002 பீர் பெட்டிகளும் விற்பனை ஆகியுள்ளது
.
கடந்த மாதம் இதே கால கட்டத்தில் ரூ.14 கோடிக்கு, 38 ஆயிரத்து 423 மது பெட்டிகளும், 15 ஆயிரத்து 370 பீர் பெட்டிகள் மட்டுமே விற்பனையானது. இந்த மாதம் மூன்று கோடிக்கு அதிகம் விற்பனையாகியுள்ளது. கடந்த மாதம் பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் இருந்தும் இந்த அளவு விற்பனை இல்லை.






கருத்துகள் இல்லை: