செவ்வாய், 8 மே, 2012

மருத்துவமும் போராடி பெறு


கடலூரைச் சேர்ந்தவர் . பாலமுருகன். இவர் டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரிகிறார். சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுமாறு அவருக்கு டாக்டர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.



இதைத் தொடர்ந்து பாலமுருகனுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ரூ. 5 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளனர்.

ஆகவே, டாஸ்மாக் ஊழியர்களுக்கான மருத்துவத் திட்டத்தின் கீழ் தனது சிகிச்சைக்கான தொகையை வழங்க வேண்டும் என்று கோரி டாஸ்மாக் பொது மேலாளருக்கு பாலமுருகன் மனு அனுப்பியுள்ளார். ஆனால், அவரது மனுவை பொது மேலாளர் நிராகரித்து விட்டார்.

டாஸ்மாக் ஊழியர்களுக்கான மருத்துவத் திட்டத்தின் கீழ் அதிகபட்சம் ரூ.1 லட்சம் மட்டுமே வழங்க முடியும் என்றும், அதையும் சிகிச்சைக்குப் பிறகே வழங்க முடியும் என்றும் அவர் கூறி விட்டார்.

இதனை எதிர்த்து பாலமுருகன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கே. சந்துரு, சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக பாலமுருகனுக்கு தேவைப்படும் முழுத் தொகையையும் வழங்குமாறு டாஸ்மாக் நிர்வாகத்துக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு விவரம்மதுபான விற்பனை மூலம் டாஸ்மாக் நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது. அவ்வாறு மது விற்பனை செய்வதன் மூலம் பலரின் சிறுநீரகங்கள், கல்லீரல் பாதிக்கப்பட டாஸ்மாக் நிறுவனமே காரணமாக உள்ளது.

இந்நிலையில், மருத்துவத் திட்டத்தில் இணைந்திருக்கும் தமது நிறுவனத்தின் ஊழியர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அவரது சிகிச்சை செலவுக்கு வழங்க வேண்டிய தொகை தொடர்பாக டாஸ்மாக் நிறுவனம் எவ்வித உச்சவரம்பும் நிர்ணயிக்க முடியாது.

ஆகவே, பாலமுருகனின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு ஆகும் முழு செலவுத் தொகையையும் செலுத்தி விடுகிறோம் என்று உறுதியளிக்கும் கடிதத்தை ஒரு வார காலத்துக்குள் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு டாஸ்மாக் பொது மேலாளர் அனுப்பிட வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

சட்டசபையில்  அமைச்சர்  பேச்சு:

கள்ளச்சாராயம் மற்றும் மெத்தனால் ஆகியவற்றின் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் விளக்க மாவட்டந்தோறும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும். இதற்கென ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ. 2 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 64 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.

மாநில அளவில் இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை û ணயருக்கு ரூ. 36 லட்சம் நிதி வழங்கப்படும். சாராயம், மதுபானங்கள் பருகுவதால் ஏற்படும் தீமைகளைப் பற்றிய விழிப்புணர்வு முகாம்கள் நடத்த ரூ. 1 கோடி செலவிடப்படும்.

கள்ளச்சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய குற்றங்களுக்கு சிறைத் தண்டனை பெற்று விடுதலையாகி திருந்துபவர்களின் பொருளாதார மறுவாழ்வுக்காகவும், வேறு தொழில்களை மேற்கொள்ள உதவுவதற்காகவும் ரூ. 5 கோடி மறுவாழ்வு நிதி மானியமாக வழங்கப்படும்.

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு எரிசாராயம், போலி மதுபானங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க கிறிஸ்டியான்பேட்டை, திருவலம், மாதகடப்பர் (வேலூர்), ஊத்துக்கோட்டை, பொன்பாடி (திருவள்ளூர்), குருவிநாயனபள்ளி (கிருஷ்ணகிரி), ஆசனூர் (ஈரோடு), மொண்டியம்மன் நகர் (சென்னை) ஆகிய எட்டு இடங்களில் மதுவிலக்கு சோதனைச் சாவடிகள் புதிதாக அமைக்கப்படும்

என்றார் நத்தம் விஸ்வநாதன்.

எமது கோரிக்கை:

டாஸ்மாக் ஊழியர்கள் கடந்த ஒன்பதுஆண்டுகள் பணியாற்றியும் நிர்வாகம் ஒரு நிலையான மருத்துவ உதவி திட்டத்தினை செயல்படுத்தாமல் உள்ளது.திருமணமானவர்களின் தாய் தந்தையர் உடல்நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவ நிதி வழங்குவதில்லை.எந்த வங்கியும் குறைவான சம்பளத்தினை கொண்டு உள்ளதால் கடனும் கொடுப்பதில்லை.இந்த கவலையிலேயே தங்களிடம் இருக்கக்கூடிய ஒரே பொருளான மதுவிற்கு பல ஊழியர்கள் அடிமையாகின்றனர். டாஸ்மாக் ஊழியர் மற்றும் அவர்களது குடும்பதினருக்கே உதவ மறுக்கும் நிர்வாகம் பொதுமக்களுக்கும் சாராயகாய்ச்சுபவர்களின் மறுவாழ்விற்கு உதவபோவதாக அறிவித்துள்ளது.இது எந்த அளவிற்கு மக்களுக்கான உதவிதிட்டமா? அல்லது அரசியல் வாதிகளுக்கும் அதிகாரிகளுக்குமான உதவிதிட்டமா? என்பதனை பொறுத்திருந்து பார்போம்.நீதிமன்ற தீர்ப்புகளில் ஊழியர் நலன் சார்ந்த விசயத்தில் எப்பொழுதும் மேல்முறையீடு செய்யும் நமது அரசு இவ்விஷயத்தில் மேல்முறையீடு செய்யாமல் உடன் நீதியினை வழங்கவும், டாஸ்மாக் ஊழியர்களின் மருத்துவ உதவியினை தமிழக அரசு தலையிட்டு உழைப்பவர்களுக்கு உதவிட டாஸ்மாக் செய்திகள் தளம் வேண்டுகின்றது.

கருத்துகள் இல்லை: