வியாழன், 15 ஆகஸ்ட், 2013

கருப்புக்கு சரக்கு.

தமிழகத்தின் கிராமங்களின் காவல் தெய்வமாக விளங்குவதில் முதலிடம் வகிப்பவர் கருப்பசாமி ஆகும்.கருப்பசாமி சங்கிலி கறுப்பன் என்றும் அழைப்பதுண்டு. கருப்பசாமி வழிபாடு தமிழ்நாட்டு கிராமங்களில் பரவலாக இருக்கின்றது. கருப்பசாமி வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

கருப்புசாமி, கருப்பாயி என்னும் பெயர்களைத் தமிழர்கள் தம் குழந்தைகளுக்குச் சூட்டுவது வழக்கம். இவை இந்தத் தெய்வத்தை அழைக்கும் பெயர்கள். 'காத்து கருப்பு அண்டாது' எனக் கூறி இருளில் செல்வோருக்குக் குதிக்காலின் பின்புறம் கரியைக் குழைத்துப் பூசி அனுப்பும் (மூடப்)பழக்கம் இருந்துவந்தது. இந்த வழக்கில் 'கருப்பு' என்னும் சொல் பேயை உணர்த்தும். கருப்பு என்னும் சொல்லுக்கு வறுமை, பஞ்சம் என்னும் பொருள்களும் உண்டு. கரும்பு சாற்றைக் கருப்பஞ்சாறு என்கிறோம். அதுபோலக் கருப்புசாமியைக் கருப்பசாமி எனவும் வழங்குகிறோம். தமிழ்நாட்டு காவல் தெய்வங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற முக்கிய தெய்வமாக கருப்புசாமி அருள்பாலித்து வருகிறார்.