புதன், 9 அக்டோபர், 2013

குடி விடு


திருமங்கலத்திற்கும் மதுரைக்குமான எனது தினசரி வேலைக்கான பயணங்களுக்கிடையே திருப்பரங்குன்றம் மற்றும் திருநகர் பகுதிகளில் “குடிவிடு” என்ற நூல்வெளியீட்டு விழாவிற்கான சுவர் விளம்பரங்கள் என்னை இயற்கையாகவே அதன்பால் ஈர்த்தன. சரி என்னதான் சொல்கிறது நூல் மற்றும் பேச்சாளர்கள் என்பதனை அறியும் நோக்கில் அக்டோபர் 1ல் மதிய உணவிற்கு பின்பு ஒரு குட்டி உறக்கம் என்ற பெயரில் நீண்ட தூக்கத்தினை தொடர்கையில் திடீரென்று எழுப்பிய பொழுது மணி மாலை5 ஐ தாண்டி இருந்தது. உடன் எழுந்து குட்டி குளியலை போட்டுவிட்டு எனது பைக் தனை இயக்கி கியர்தனை முறுக்கி திருமங்கலம் நகர் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்நிலையங்களில் நாளை விடுமுறை என்பதால் இல்லம் சென்றடைய பலர் முண்டியடித்து பஸ்களில் இடம்பிடிப்பதும் சாலைகளை கடப்பதுமாக ஜனநெருக்கடிகளை கடந்து கொண்டிருக்கையில்  எனது கவனம் அனைத்தினையும் சாலையில் வைத்து திருமங்கலத்தினை கடக்கையில் மறவன்குளம் கண்மாய் அருகில் மாலையில் அடித்த வெயிலுக்கு  பகரமாக விண்ணவன் மழைச்சாரலினை வழங்க அந்த இனிய குளிர்காற்றினை கிரகித்தவனாக பைக் வேகத்தினை அதிகப்படுத்தி கப்பலூர் பாலத்தில் ஏறி இறங்குகையில் மயில்களின் அகவல்குரல்களை ரசித்துக்கொண்டே செல்கையில் கப்பலூர் காலனி மரங்களின் பறவைகள் நாங்கள் என்ன மயிலுக்கு குறைவானவர்களா என போட்டியிட்டு தங்களது ரீங்கார குரல் கொண்டு அந்தப்பகுதி முழுவதினையும் ஆக்கிரமித்தன,
பறவைகள் தங்களது இல்ல கூடுகளில் அடையும் நேரம் என்பதோடு மழை தாக்கம் அதிகரிப்பதாலும் அதன் குரல்கள் கூத்தியார்குண்டு வரை எதிரொழித்தது எனக்கு பயண வாழ்த்து பாடியது போன்று இருந்தது. மில்கள் மற்றும் வாகன கம்பெனிகளில் தங்களது சக்திகள் அனைத்தினையும் கொடுத்துவிட்ட எனது தொழிலாளர் தோழர் தோழிகள் பஸ்களுக்காக காத்திருப்பதும் மழைக்கு ஒதுங்கி நிற்பதினையும் கண்டவாறே திருநகர்தனை கடந்து திருப்பரங்குன்றத்திற்குள் நுழைந்தேன். மழையின் தாக்கம் குறைந்தாலும் சாரல் அடித்தவண்ணமே இருந்தது. நிகழ்ச்சி மழையினால் நடக்குமா? என குழம்பியவாரே 16 கால் மண்டபம் நோக்கி வண்டியை செலுத்தினேன். தூரத்திலேயே ஒலிபெருக்கி குரல் கேட்டவுடன் நிகழ்ச்சி நடைபெறுவதினை உறுதி செய்து மேடைக்கு கிழ் அமைக்கப்பட்ட இருக்கையில் நிகழ்ச்சியினை நன்கு காணுமாறு இடம்பிடித்து அமர்ந்தேன். 16 கால் மண்டபத்தினை ஒட்டியே திறந்தவெளி மேடை அமைத்து இருந்தது பார்வையிடுவதற்கு அருமையாக இருந்தது. என்னுடன் ஒரு சிலரே முதலில் அமர்ந்து இருந்தனர்.
புத்தக வெளியீட்டு நிகழ்வு.
மேடையில் மதுவுக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சசிபெருமாள் மற்றும் குடிவிடு ஆசிரியர் ப.மோகன் தாஸ் மற்றும் அவரது தாய் வசந்தா, மனைவி காத்தூன்பீவி மற்றும் சிலர் அமர்ந்திருந்தனர். விழாவின் முதன் நிகழ்வாக குடிவிடு புத்தகம் வெளியிடப்பட்டது. புத்தகத்தினை  சசிபெருமாள் வெளியிட நூலாசிரியரின் தாய் வசந்தா அவர்கள் பெற்றனர்.
கவியரங்கம்.
நூல்வெளியீட்டிற்கு பிறகு மழைகளுக்கு நடுவே கவியரங்கம் நடைபெற்றது. மதுவுக்கு எதிராக கவிஞர்கள் ரவி,நிலையூர் பாண்டி,முருகேசன் மதிமுக, இரா.ஜீவா ஆகியோர் கவி பாடினர். பின்பு விடுதலை சிறுத்தைகள் மாநிலசெயலாளர்களில் ஒருவரான கனியமுதன் மற்றும் மதிமுக மருத்துவரணி துணை பொதுசெயலாளர் மருத்துவர்.சரவணன் ஆகியோர் குடிவிடு நூல்குறித்தும் ஆசிரியர் மது அரக்கனிடமிருந்து மீண்டு வந்தமை குறித்தும் உரையாற்றினர். மழையின் சீற்றம் குறைந்தவுடன் மேடைக்கு கீழ் அமைக்கப்பட்ட இருக்கைகள்  அனைத்தும் நிறைந்தது. எனது இருபுறங்களில் அமர்ந்து இருந்தவர்கள் குடிமயக்கத்திலேயே இருப்பது அவர்களிடமிருந்து வெளிப்பட்ட மதுவாடையிலிருந்து தெரிய வந்தது.கூட்டத்திற்கு வந்தவர்களை பார்த்த பொழுது அதில் பலர் குடிகாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியின் செய்தி யாருக்கு செல்லவேண்டுமோ அவர்களை சென்றடைவது குறித்து மகிழ்ந்தேன்.
பட்டிமன்றம்
பட்டையை கிளப்பிய பட்டிமன்றத்தில் தலைப்புகளே மதுவிழிப்புணர்வுக்கு சான்றாக அமைந்தது. மதுவிலிருந்து மனிதன் விடுபட தேவை   கனிவான அறிவுரைகளே என்று சங்கீதா மற்றும் தேவி அவர்களும் கண்டிப்பான சட்டங்களே என்று ஆனந்தன்  மற்றும்  மீரா ஆகியோர் உரை வீச நடுவராக பொன்.சந்திரசேகர் சிறப்பாக நடத்தினர்.
குடிவிடு புத்தகம் குறித்து
வெளிச்சம் பதிப்பகத்தின் குடிவிடு நூலானது ஆசிரியர் ப.மோகன்தாஸ் அவர்களின் “நான் மகான் அல்ல” என்ற கவிதையின் வாயிலாக ஆரம்பிக்கின்றது. அக்கவிதையினை நோக்கும்பொழுதே ஆசிரியர் மதுவின் பிடியிலிருந்து தான் மீண்டது போல் பலரையும் மீட்டெடுப்பார் என்பது புலனாகிறது. தள்ளாத வயதில்லை – எனக்கு ஆனா தள்ளாட்டம் நிற்கவில்லை என்ற வரியிலிருந்து ஆசிரியர் எழுத்தாற்றில் சிறந்தவர் என நிரூபனமாகிறது. பரம்பரையில் போதைக்கு அடிமையானோர்  இருக்கும்பட்சத்தில் ஜீன்களின் விளையாட்டால் பின் சந்ததியினரும் பாதிக்கப்படுவர் என்பது அறிந்து மதுவானது அணுவினை போன்று  ஆபத்தானது என விளங்கினேன். என்னுடன் பணியாற்றும் பல டாஸ்மாக் ஊழியர்கள் மதுவிற்கு அடிமையாகி இளமைதனையும் வருங்கால சந்ததியினர் வாழ்வினையும் இழந்து வருவதனையும் 2003ல் டாஸ்மாக் துவங்கிய பொழுது 36000மாக இருந்த ஊழியர்கள் எண்ணிக்கை தற்பொழுது 28000மாக குறைந்தது குறித்து அரசு கவனத்தில் கொண்டு டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டுகிறேன்.
 குடிவிடு நூலினை படித்த ஒருவரேனும் மதுவை கைவிட்டேன் என தகவல் கிடைத்தால் அதுவே மிகப்பெரிய வெற்றி என ஆசிரியர் அவர்கள்  புத்தகத்தில் முடித்த வார்த்தைகளை கொண்டே கட்டுரையினை முடிக்கின்றேன். நல்லோர் வாக்கு என்றும் பொய்ப்பதில்லை.
வ.ஷாஜஹான். 99425 22470.

திருமங்கலம்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

கட்டுரையில் மழை வருவதை தொடர்ந்து நடக்கும் புத்தகம் வெளியிடு நன்றாக உள்ளது.மழை தங்கள் மற்றும் தேவதாஸ் போன்றவர்களால் தான் பெய்கிறது.

இளஞ்செழியன் சொன்னது…

டாஸ்மாக் செய்திகள் வலைபூவில் இப்படி ஒரு அருமையான நிகழ்வை பதிவிட்டு, மகிழ்ச்சிக் கடலில் என்னை மூழ்கடித்துள்ளீர்கள். கட்டுரை அருமை. குடிவிடு நிகழ்ச்சியை தேடிச்சென்ற அனுபவம் அதைவிட அருமை.

இறுதியாக நல்லோர் வாக்கு என்றும் பொய்பதில்லை. நிச்சயம்...உண்மை. குடிவிடு நூலாசிரியருக்கும் உங்கள் நினைவுகளும்... நனவாக வாழ்த்துக்கள்.