வியாழன், 23 ஜனவரி, 2014

மாமியா உடைச்சா?

தமிழகத்தின் குடும்பசூழ்நிலைகளை கணக்கில் கொண்டு “மாமியா உடைச்சா மண்சட்டி மருமக உடைச்சா பொன் சட்டி” எனக்கூறுவர். தற்பொழுது மண்சட்டியே இல்லாதநிலையிலும் இன்றும் இந்த சொலவடை உயிர்ப்புடன் உலாவி வருகின்றது. வீட்டில் உடையும் பொருளின் மதிப்பு உடைப்பவர்களை கொண்டே நிர்ணயிக்கப்படுகின்றது. மாமியார்,மருமகள் தாண்டி வேலைக்காரி தப்பிதவறி எதாவது உடைத்துவிட்டால் அவ்வளவுதான் அந்த பொருளின் மதிப்பே தனி.
சரி நம்ம டாஸ்மாக் பக்கம் வருவோம் நண்பர்களே.

மதுபான கம்பெனிகளில் உருவாகும் மதுபான வகைகள் மாவட்டந்தோறும்  அமைந்துள்ள டாஸ்மாக் குடோன்களுக்கு கம்பெனிகளால் கொண்டுவந்து சேர்க்கப்படும்.இந்த மதுபானங்கள் கடைகளுக்கு அதிகாரிகளால்  அனுப்பி வைக்கப்படும். இந்த கம்பெனியிடமிருந்து பெற்று கடைக்கு அனுப்பும் வரை பாட்டில் உடைந்து சேதம் ஏற்படும் என்பதால் அதிகாரிகள் இந்த இழப்பிடுகளை ஈடுசெய்ய இன்சூரன்ஸ் செய்து வருகின்றன.

கடந்த2008 முதல் 2009ல் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனத்திடம் டாஸ்மாக் நிறுவனம் காப்பீடு செய்தது.கட்டிய பீரிமியம் தொகை 7.13 கோடி ரூபாய் ஆகும்.இந்த 2008 முதல் 2009 வரையிலான பாட்டில்கள் உடைந்த மதிப்பாக டாஸ்மாக் நிறுவனம் கூறுவது 11.71 கோடி எனக்கூறி இழப்பிடு கேட்டது. ரிலையன்ஸ் ஜெனரல் இன்சுரன்ஸ் நிறுவனம் 9.14 கோடி வழங்கியது.ஆனால் மீதி2.57கோடிரூபாயும் அதற்கான வட்டியுடன் சேர்த்து 3.51 கோடிரூபாயினை கேட்டு நீதிமன்றத்தினை அணுகி சென்னை உயர்நீதிமன்றத்தில் இழப்பீட்டினை வழங்க ஆணையும் டாஸ்மாக்நிறுவனம் பெற்றுள்ளது. சிறப்பாக அதிகாரிகள் செயல்பட்டு இழப்பீடுகளை பெற்றுவிட்டார்களே அப்புறம் என்ன? என்கிறீர்களா?

அதிகாரிகள் பொறுப்பில் சரக்கு இருக்கும் வரை காப்பீடு அதற்கு இழப்பீடு பெரும் அதிகாரிகள். டாஸ்மாக் ஊழியர்கள் கடைகளில் சரக்குகளை இறக்கும் பொழுதும், அதை அட்டியல் போட்டு வைத்து பாதுகாக்கும் பொழுதும், வாடிக்கையாளர்கள் பார்வைக்காக அலமாரிகளில் அடுக்கும் பொழுதும், வாடிக்கையாளருக்கு வழங்கும் பொழுதும் உடையும் பாட்டில்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு நஷ்ட ஈட்டு தொகை வழங்கியுள்ளார்கள் என நினைக்கிறீர்கள். நண்பர்களே பூஜ்யம் தான் மிச்சம்.

பாட்டில்களை கையாளும் பொழுது பீர்களில் உள்ள அதிக வாயுவினால் ஒருபாட்டில் உடைந்தால் அந்த கேஸ் பெட்டியின் அட்டைபெட்டி நனைந்து ஊறி பாட்டில் அனைத்தும் உடையவும் அந்த அட்டியலே சரிந்து பாட்டில்கள் அனைத்தும் உடையவும் வேலை நேரம் எனில்  ஊழியர்கள் மேல் விழ்ந்து  மிகபெரியகாயங்களும் இழப்பீடுகளும் ஏற்படும். அதுமட்டுமில்லாது, காலையில் கடையை திறக்கும் பொழுது கடையூனுள் அட்டியல் கவிழ்ந்து மது ஆறாக ஓடும்.பீர்களை குளிர்சாதனப்பெட்டிகளில் அடுக்கும் ஊழியர்கள் உள்ளே குனிந்து அடுக்கும் பொழுது அதிக வாய்வினால் வெடித்து முகமெல்லாம் கண்ணாடி சில்களாக ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற அனுபவமும் உண்டு. இவ்வாறு ஊழியர்கள் பாட்டில் உடைவின்மூலம் பல கஷ்டங்களை சந்தித்து வருகின்றனர். இப்படி கடந்த 10ஆண்டுகளாக ஊழியர்களை வஞ்சித்து வரும் டாஸ்மாக் நிர்வாகம் பாட்டில் உடைவிற்கு என்று நஷ்ட ஈட்டு தொகை என்று வழங்கும்? திருந்துமா? 

தங்களின் மேலான கருத்துக்களை எமக்கு கீழே தெரிவிக்கவும்.மற்றும் tasmacnews@gmail.com.

கருத்துகள் இல்லை: