வியாழன், 6 ஆகஸ்ட், 2015

மரண வியாபாரமும் மக்கள் போராட்டமும்

தள்ளாடும் தமிழகம் 3
தமிழகத்தில் மதுக் கொள்கை என எதுவும் இல்லை. அதிகபட்ச வருவாய் ஒன்றுதான் அதன் இலக்கு. அந்த இலக்கை ஆண்டுதோறும் எட்ட வேண்டுமெனில் புதிய குடிகாரர்களையும், குடி அடிமைகளையும் அது உருவாக்கியாக வேண்டும். எந்தவொரு சந்தைப் பொருளுக்குமே தனக்கான வாழ்நாள் நுகர்வோரை உருவாக்குவதுதான் இலக்கு என்ற அடிப்படையில் டாஸ்மாக்கிற்கு தனது குடிமக்களை வாழ்நாள் நுகர்வோராக்கி சாதனை படைத்திருக்கிறது தமிழக அரசு என்னும் வெற்றிகரமான வியாபாரி. 
'
இளைப்பாறுவதற்காக, மகிழ்ச்சிக்காக, த்ரில்லுக்காக, தனிமைக்காக, அலுப்பிற்காகக் குடிக்க வருகிறவர்களை முழு நேர குடிகாரர்களாக்கி அவர்களை வாழ்நாள் முழுவதும் மதுவின் நுகர்வோராக்குவதுதான் தமிழக அரசின் திட்டம். கட்டுப்பாடில்லாமல் குடிக்க வேண்டுமென்பதற்காகத் தான் அது பார்களை திறந்து வைத்திருக்கிறது. வெறும் கடைகள் மட்டுமிருந்தால் தன் தேவைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டில் வைத்து குடிப்பார்கள். பார்களைத் திறந்து வைத்து இத்தனை கேஸ்களை விற்றும் ஆக வேண்டும் என்று சொல்வதால் வருவோரை எல்லாம் அதிகம் குடிக்க வைக்க வேண்டிய கட்டாயம் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு வந்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாகக் குடிப்பவர்களை அவர்கள் தடுப்பதே இல்லை' என்கிறார் நாராயணன். 

புதன், 5 ஆகஸ்ட், 2015

மது மாஃபியா



(தள்ளாடும் தமிழகம் 2)



தமிழகத்தில் இப்போது மதுதான் மாஃபியா. அரசு, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பெருந்தொழிலதிபர்கள் சமூக விரோதிகள் இவர்கள் அனைவரும் சேர்ந்தே டாஸ்மாக்கை நடத்துகின்றனர். அரசுக்கு மட்டுமல்ல அரசியல்வாதிகளுக்கு சமூக விரோதிகளுக்கும் டாஸ்மாக் மூலம் பணம் கொட்டுகிறது. 2003க்கு முன்பு வரையிலும் மது விற்பனையிலிருந்து தமிழகத்திற்கு 20-30 கோடிதான் கிடைத்து வந்தது. தமிழகம் முழுவது, சுமார் 7 ஆயிரம் கடைகளைத் திறந்து சில்லறை வர்த்தகத்தில் அரசு இறங்கியதும் அதன் வருவாய் உயரத் தொடங்கியது. 18 ஆயிரம் கோடி ரூபாய் வருவாயை கடந்து கூடுதலாக ஒரு பத்து ஆயிரம் கோடியாவது அரசியல்வாதிகளுக்கும் சமூக விரோதிகளுக்கும் போகிறது'' என இந்தியா டுடேவிடம் தெரிவித்தார் சமூக ஆர்வலரும் தமிழகத்தின் மதுக் கொள்கை குறித்து தொடர்ந்து விமர்சித்து வருபவருமான நாராயணன். 

2003
ஆம் ஆண்டு சில்லறை வர்த்தகத்திற்குள் நுழைகிற வரை வெறும் 4 நிறுவனங்களிடமிருந்துதான் மதுவை கொள்முதல் செய்ததது தமிழக அரசு. அதுவரை அரசியல்வாதிகள் நேரடியாக இந்த வர்த்தகத்தில் இறங்கவில்லை. ராமச்சந்திர உடையாரின் நிறுவனமான மோகன் ப்ரூவரீஸ், புருஷோத்தமன் என்பவருக்கு சொந்தமான எம்.பி குழும நிறுவனம், விஜய் மல்லையாவின் யுனைட்டட் ஸ்பிரிட்ஸ் மற்றும் பழனி அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த எஸ்.வி.பாலசுப்ரமணியனின் சிவா டிஸ்டில்லரீஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் மது உற்பத்தி செய்தன

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

தள்ளாடும் தமிழகம் 1


தமிழக அரசின் பெருமிதம் உச்சத்தில் இருக்கிறது. இருக்காதா? இந்தியாவின் டாப் 5 பொதுப்பணித் துறை நிறுவனங்களில் ஒன்றாக தமிழகத்தின் டாஸ்மாக் இடம் பிடித்ததே!. இந்தியாவின் வேறெந்த மாநிலமும் மது விற்பனையில் இத்தகைய சாதனையை(!) படைக்கவில்லை. 2003-04 ஆம் ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் கிடைத்த ஆண்டு வருவாய் ரூ.3,500 கோடி. தற்போது 2011-12ல் 18 ஆயிரம் கோடி ரூபாயாக ஆறு மடங்கு உயர்ந்திருக்கிறது. சரிவில்லாமல் வருவாய் உயரும் ஆணவத்தில் அடுத்த ஆண்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேலைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. 

2012-2013
ல் ரூ. 21 ஆயிரம் கோடியை எட்டியாக வேண்டும். அப்படியெனில் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் நாளொன்றுக்கு சுமார் 1000 கேஸ்கள் விற்றாக வேண்டும், அதிகளவு மதுப் பெட்டிகளை விற்றுத் தீர்க்கும் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் உற்சாகத்தில் அதிகளவு மதுப் பெட்டிகளை விற்க கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர் டாஸ்மாக் விற்பனையாளர்கள். இந்திய ஆட்சிப் பணியாளர்களுக்கு தமிழக அரசு வழங்கியிருக்கும் மாபெரும் அஸைன்மெண்ட் இது. ஆய்வுக் கூட்டங்களில் அவர்களின் மண்டை காய்கிறது. ..எஸ் படிப்பு சாராயம் விற்க பயன்படும் சோகத்தில் இருக்கின்றனர் அவர்கள். என்றாலும் வேறு வழியில்லை. மது விற்பனை என்பது அரசச் செயல். அதனால் மக்களை குடிமக்களாக மாற்ற வேண்டியது அவர்களின் கடமையாகிறது.