செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

தள்ளாடும் தமிழகம் 1


தமிழக அரசின் பெருமிதம் உச்சத்தில் இருக்கிறது. இருக்காதா? இந்தியாவின் டாப் 5 பொதுப்பணித் துறை நிறுவனங்களில் ஒன்றாக தமிழகத்தின் டாஸ்மாக் இடம் பிடித்ததே!. இந்தியாவின் வேறெந்த மாநிலமும் மது விற்பனையில் இத்தகைய சாதனையை(!) படைக்கவில்லை. 2003-04 ஆம் ஆண்டுகளில் டாஸ்மாக் மூலம் கிடைத்த ஆண்டு வருவாய் ரூ.3,500 கோடி. தற்போது 2011-12ல் 18 ஆயிரம் கோடி ரூபாயாக ஆறு மடங்கு உயர்ந்திருக்கிறது. சரிவில்லாமல் வருவாய் உயரும் ஆணவத்தில் அடுத்த ஆண்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு வேலைகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. 

2012-2013
ல் ரூ. 21 ஆயிரம் கோடியை எட்டியாக வேண்டும். அப்படியெனில் ஒவ்வொரு டாஸ்மாக் கடையிலும் நாளொன்றுக்கு சுமார் 1000 கேஸ்கள் விற்றாக வேண்டும், அதிகளவு மதுப் பெட்டிகளை விற்றுத் தீர்க்கும் டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் உற்சாகத்தில் அதிகளவு மதுப் பெட்டிகளை விற்க கங்கணம் கட்டிக் கொண்டுள்ளனர் டாஸ்மாக் விற்பனையாளர்கள். இந்திய ஆட்சிப் பணியாளர்களுக்கு தமிழக அரசு வழங்கியிருக்கும் மாபெரும் அஸைன்மெண்ட் இது. ஆய்வுக் கூட்டங்களில் அவர்களின் மண்டை காய்கிறது. ..எஸ் படிப்பு சாராயம் விற்க பயன்படும் சோகத்தில் இருக்கின்றனர் அவர்கள். என்றாலும் வேறு வழியில்லை. மது விற்பனை என்பது அரசச் செயல். அதனால் மக்களை குடிமக்களாக மாற்ற வேண்டியது அவர்களின் கடமையாகிறது. 



இந்திய ஆட்சிப் பணியாளர்களின் இக்கட்டான நிலையை உணர்த்த ஒரு ப்ளாஷ்பேக் நிகழ்வை நினைவுகூறலாம். கடந்த 2011 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் தூனேரி பஞ்சாயத்தைச் சேர்ந்த தொரைசல் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். நீலகிரி மாவட்டம் முழுவதும் குறிப்பாக பழங்குடியின மக்களான படுகர் இனத்தவரிடையே குடிப் பழக்கம் அதிகரித்து விட்டதையும் எண்ணற்ற இளைஞர்கள் மதுவிற்கு அடிமையானதையும் சுட்டிக் காட்டி இந்த பிரச்சனையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் சுட்டிக் காட்டப்பட்டது. 
வெறும் 600 குடும்பங்கள் மட்டுமே வசிக்கும் ஊருக்குள் வசதியான இடத்தில் டாஸ்மாக் கடை இயங்குவதால் ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் பகலிலேயே குடித்துவிட்டு விழுந்துவிடுவதால் தங்கள் குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்துவிட்டதாகவும் போதைக்கு அடிமையாகிவிட்டதால் குடிக்க பணம் கேட்டு தங்களை துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டனர் பெண்கள். டாஸ்மாக் கடையை ஊரிலிருந்து அகற்ற வேண்டுமென்பது அவர்களது கோரிக்கை. ஆனால் அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டாஸ்மாக்கின் வருவாயை பெருக்க உத்தரவிடப்பட்ட ஒரு மாவட்ட ஆட்சியர் மக்களின் இந்த கண்ணீர் மனுவை எப்படி விசாரிக்க முடியும்?

 
'
அரசுக்கு அதிகபட்ச வருவாயை அறுவடை செய்வது' என்பதுதான் டாஸ்மாக்கின் முழக்கம். சந்தேகமே இல்லாமல் தமிழக அரசு அடுத்தடுத்த ஆண்டுகளில் தன் இலக்கை அடைந்துகொண்டே இருக்கும். ஆனால் மது விற்பனையை மாநிலத்தின் முதன்மை வருவாயாக முன்னிறுத்தியதன் மூலம் தன் மக்களை பெருங்குடிகாரர்களாக்கி மாபெரும் மரண வியாபாரியாகிவிட்டது தமிழக அரசு என்ற குற்றச்சாட்டிற்கும் அது கூண்டிலேற நேரிடும். இந்த குற்றச்சாட்டு ரகசியமானதோ ஆதாரமற்றதோ அல்ல. கடந்த பத்தாண்டுகளில் குடிப்பவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் பன்மடங்காக பெருகியிருக்கிறது. 

குளோபல் சர்வே என்ற அமைப்பு இந்தியர்களின் மது அருந்தும் பழக்கம் குறித்து நாடு முழுவதும் நடத்திய ஆய்வில் 16% குடிகாரர்களோடு தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. 21 சதவீதத்தை பிடித்து முதல் இடத்தில் இருப்பது உத்திரப்பிரதேசம். ஆனால் 20 கோடி மக்கள் தொகை கொண்ட .பியுடன் வெறும் 7 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகம் போட்டி போடும் வேகத்தைப் பார்த்தால் அது இன்னும் சில ஆண்டுகளில் முதல் இடத்திற்கு வர வாய்ப்பு அதிகம். அது மட்டுமல்ல மது மூலம் கிடைக்கும் வருவாயை ஆண்டுக்கு ஆண்டு பெருக்க விழையும் தமிழக அரசின் வெறியும் போதையின் விளைவுகள் குறித்து அக்கறை கொள்ளாத மதுக் கொள்கையும் பருவ வயது குடிகாரர்கள், பகல் குடிகாரர்கள், 24 மணி நேரக் குடிகாரர்கள் என வீட்டுக்கு வீடு குடி நோயாளிகளை உருவாக்கி வருகிறது. 
இந்த பேராபத்தை மூடி மறைத்து நிரம்பி வழியும் தனது கஜானாவை மட்டுமே சாதனையாக தம்பட்டம் அடித்துக் கொள்கிறது தமிழக அரசு. மது விலக்குச் சட்டம் வெகு காலத்திற்கு அமலில் இருந்த, கள்ளுக்கடைகளுக்கு எதிராக பெரியார் மாதிரியான போராளிகள் போராட்டம் நடத்திய தமிழகத்தில் அரசே நடத்தும் மதுக் கடைகளுக்கு எதிரான முழக்கங்கள் கேட்கத் தொடங்கிவிட்டன. 

இந்த கட்டுரையின் ஆதாரமான தகவல்களும் புள்ளிவிபரங்களும் 2012 ஆம் ஆண்டிற்கானது.
நன்றி :இந்தியாடூடே
நன்றி: எழுத்தாளர் ஜெயராணி மயில்வாகணன்

தொடரரும்: தள்ளாடும் தமிழகம் 2

கருத்துகள் இல்லை: